Sunday, June 23, 2013

பேஸ்புக் படுத்தும் பாடு!

    கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக்மூலம் பிரபலமாவதும் ப்ராப்ளம் ஆவதும் சிறப்பாகவே நடந்து வரும் தருணத்தில் இரு நாட்களுக்கு முன்பு ஒரு கனவு...

     திடீர் என நான் டி.வி.பெட்டியில் தோன்றி நான்கைந்து பேர்களுடன் சேந்து கொண்டு கூச்சல் போடுவது போல...இது என்ன புதுசா இருக்கே என யோசிக்கும்போது தான் புரிந்தது...கருத்து கந்தசாமிகளில் நானும் ஒருவனாக மாற வேண்டும் என்கிற ஆசை எனக்குள் தோன்றி மெல்ல மெல்ல வெறியாக மாறுவதை உணர்ந்தேன்.

     இதற்கு என்ன வழி என சதா யோசித்து பார்த்ததில்...ப்ளாக் எழுதவேண்டும்.....பிறகு அதை ஷேர் செய்ய வேண்டும்....எப்படியும் கொஞ்சநாளில் ஈரோடு சங்கமம் என சில இடங்களில் அழைத்து என் சேவையை(!) பாராட்டி சென்னிமலை போர்வை போர்த்துவார்கள்.... பிறகு அப்படியே பத்திரிக்கைகளில் எழுதி...அப்படியே டி.வி. பெட்டிக்குள் புகுந்துவிட்டால் அதுவே என்னை பிரபலமாக்கி மெல்ல ஒரு அரசியல் கட்சிக்குள் சேர்த்துவிடும்....பிறகு என்ன, ஒரு எம்.எல்.எ வேண்டாம் வேண்டாம்...ஒரு எம்.பி. அதுவும் ஜனங்களிடம் சென்று அலையோ அலை என அலையாமல்...நோகாமல் நோம்பிக்கும்பிடும் ராஜ்ய சபா எம்.பி. ஆகி விட்டால் கூட போதும் என்ற ஒரு சிறிய ஆசை தோன்றியது.

     உடனே தூசி மண்டிக்கிடந்த என் ப்ளாக்கை தூசி தட்டி துடைத்து, ப்ளாக்-கின் குல சாமிகளான அதிஷா, ஈரோடு கதிர், உண்மைத்தமிழன் ஆகியோர் இருக்கும் திசைகள் பார்த்து ஒரு பெரிய கும்பிடாக போட்டு விட்டு ஒரு ப்ளாக் எழுதி அதை பேஸ்புக்-கிலும் போட்டுவிட்டேன்....வார நாளாக இருந்திருந்தால் எல்லோரும் சின்சியராக ஆஃபீசில் வந்து கம்ப்யூட்டரில் உக்காந்து பேஸ்புக் பார்த்து லைக்கி இருப்பார்கள்...என் நேரம் நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை....உடனே என் மூளை தீவிரமாக யோசித்து ஒரு நாலைந்து பேரை டேக் செய்யச்சொன்னது... இது தான் விதி!....

     நான் லாக்-அவுட் செய்து சென்ற சில நிமிடங்களில் சௌதி அரேபியா சுரேஷ் சீனு சார் முதல் உள்ளூர் ஜீவானந்தன் சார் வரை போன் செய்து என்ன ஆச்சு உங்க அக்கவுன்ட் டி-ஆக்டிவேட்-ல் இருக்கு என்று விசாரித்தார்கள்...இதற்கே எனக்கு மண்டையில் லேசாக ஒரு கொம்பு முளைத்திருப்பதை உணர்ந்ததேன்....(பின்னே நம்மை காணோம்னு பேஸ்புக்-கே பர பரப்பக்குதுன்னா சும்மாவா)....

     அடித்து பிடித்து ஓடி வந்து என் கம்ப்யூட்டரை ஆன் செய்து பேஸ்புக் லாக்-இன் செய்தால்....அங்கே வெக்கிராங்கப்பா டிவிஸ்டு!

      யோவ்...சமீக காலமா நீ நிறையப்பேரை டேக் செஞ்சு குடுக்கிற டார்ச்சரை பார்த்துக்கிட்டு தான் இருக்கிறோம்...அதான் தற்காலிகமா உன் அக்கவுன்ட் டி-ஆக்டிவேட்!

     நாங்க வெக்கிற டெஸ்டுலே நீ பாசான தான் உள்ளே போகலாம்...ஸ்கிப் செஞ்சாலோ அல்லது ஒண்ணு தப்பானாலும் நீ பதினாலு நாளைக்கு உள்ளே நுழைய முடியாதுன்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க!

    பரீட்சைக்கு படிக்காத ஒரே புக்கே பேஸ்புக் தான்...இவங்களே இப்படி கூடி கும்மியடிச்சா என்ன நியாயம்?

     என்னடான்னா பார்த்தா நாலு மாசத்துக்கு முன்னே நான்போட்ட போட்டோவை எல்லாம் போட்டு இதிலே நீ யாரை டேக் செஞ்சே சொல்லுன்னு ஆறு ஆப்ஷன் எல்லாம் கொடுக்கிறாங்க! நாம செஞ்ச பாவம் (டேக்) கொஞ்சமா நஞ்சமா ஞாபகம் வைக்க....

     நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, KBC ரேஞ்சுக்கெல்லாம் ஆப்ஷன்ஸ்....நல்ல வேளையா முதல் கேள்வியை தாண்டினா.....ரெண்டாவது கேள்வியில் சிக்கி...அது ஜீவா சார் தான்னு பதில் சொன்னா... மூணாவது கேள்வி....அதையும் தாண்டி முடிச்ச பிறகு தான்...சரி தொலை...எல்லாம் சரியா சொல்லிட்டே...இனிமே டேக் செய்வியா என்பது போல எச்சரித்து விட்டுட்டாங்க...

     இப்ப தான் பாட்ஷா படத்திலே ரஜினி சொன்னது ஞாபகத்துக்கு வருது :
     "ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான்...ஆனா கைவிடமாட்டான்...."
    
    ஓ...சாரி...நான் சினிமா நடிகனை பத்தி சொல்லிட்டேனா....வெரிசாரி...நான் தமிழனாச்சே...திருவள்ளுவர் சொன்னது தான் ஞாபகத்துக்கு வந்துச்சு :
                                         பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கினா 
                                         பிற்பகல் தானே வரும்!

இன்னும் கொஞ்ச நாளைக்கு கனவுலே கூட யாரையும் டேக் செய்யமாட்டேன்பா!

Saturday, June 22, 2013

பாப்பா படும் பாடு!

     இன்றைய தினசரிகளில் தவறாது இடம் பிடிக்கும் செய்திகள் சிறுமி பாலியல் பலாத்காரம்...மற்றொன்று பள்ளி பேருந்தில் விபத்து - சிறுவர்கள் பலி!

     இளைய தலைமுறை, நாளைய இந்தியா, இவர்கள் வருங்காலத்தூண்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் குழந்தைகள் படும் பாட்டை யாரேனும் உணர்கிறோமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

    பெற்றோர்களின் கட்டாயத்தாலும் வற்புறுத்துதலாலும் தனது ஆசைகளை துறந்து விருப்பங்களை விடுத்து சர்க்கஸ்/மிருகக்காட்சிசாலை விலங்குகளை போல வாழும் இவர்கள் எவ்வளவு பரிதாபத்துக்கு உரியவர்கள்?

    தினசரி காலை நடைப்பயிற்சியின்போது 6.30 மணிக்கு வரிசையாக செல்லும் பள்ளி வாகனங்களை பார்க்க பகீர் என்றிருக்கிறது....கடைசி குழந்தையை எட்டு மணிக்கு ஏற்ற வேண்டிய பேருந்து ஆறரை மணிக்கு முதல் குழந்தையை ஏற்றவேண்டி இருக்கிறது....

     பெரிய பள்ளி/சிறந்த பள்ளி/ தரமான கல்வி என்று ஒரு அளவுகோலை கொண்டு நாம் சேர்க்கும் பள்ளி  இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் கொடுமையே...மாநகரங்களில் அனைத்து வசதியும் கொண்ட தனியார் பள்ளி அமைய பல ஏக்கர் நிலம் தேவை அது நிச்சயம் புற நகர்களில் தான் வாங்க முடியும்...ஒரு சின்னஞ்சிறு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் ஐம்பது கிலோ மீட்டர்கள் பயணிப்பது எந்த விதத்தில் நியாயமோ தெரியவில்லை....இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட சாஃப்டுவேர் ஊழியனே இந்த பயணத்தில் களைத்துபோகும்போது பாவம் இந்த குழந்தை எப்படி தாங்கும் என்பதை எந்த பெற்றோராவது யோசிக்கிறார்களா?

     ஆறரை மணி பஸ்ஸை பிடிக்க ஒவ்வொரு குழந்தையும் காலை நாலரை மணிக்கு எழுந்து டாய்லெட் போயி, குளித்து ஏதோ ஒன்றை வயிற்றில் அந்த விடியற்காலையில் அடைத்து...யூனிபார்ம் ஷூ சாக்ஸ் என்று அடித்து பிடித்து பஸ்ஸை பிடிக்கிறது... ஒவ்வொரு குழந்தையாக ஏற்றி அந்த பஸ் எட்டரை மணிக்கு பள்ளி சேர்கிறது...ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் பணி மூன்றரை நாலு மணிக்கு முடிகிறது. அதன்பின் மீண்டும் ஒரு மணிநேர பேருந்து  பயணம்...ஆறு மணிக்கு அந்த குழந்தை மீண்டு ஹோம்-ஒர்க், ப்ராஜெக்ட் ஒர்க், அசைன்மென்ட் ஒர்க் என்று எல்லா வேலைகளையும் முடிக்கும்போதே மணி நிச்சயம் பத்தை நெருங்கும்...தூக்கம் சொக்கும்...எப்போது படிக்கும்? இதில் சனிக்கிழமை வேறு பாதி நாள் பள்ளிக்கூடம் சிலர் முழு நாள் வேறு!

     ஸ்ட்ரெஸ், ஹைபர்டென்ஷன், ப்ரெஷர் எல்லாம் ஏதோ ஐ.டி. ஃபீல்ட் சமாச்சாரம் என்று நினைத்திருப்பவர்களே...அதெல்லாம் இப்போவே எத்தனை மடங்கு அனுபவிக்கிறார்கள் இந்த குழந்தைகள் என்று தெரியுமா?

    எவ்வளவுக்கு எவ்வளவு இத்தனை அதிக சுமை/துக்கம்/ டார்ச்சர் எல்லாம் இருக்கோ அந்த அளவு சிறப்பான பள்ளி/உயர்ந்த பள்ளி என பெற்றோர்கள் நினைப்பது தான் இந்த குழந்தைகளை மேலும் வதைக்க உதவுகிறது.

     நாமக்கல் புகழ் ப்ராய்லர்கோழி மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை முன்மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் வளர்கின்ற மாணவர்கள் வெறும் மதிப்பெண் சார்ந்த கல்வியை பெற்று மனப்பாடம் செய்து வாங்கும் மார்க் மூலம் கவுன்ஸ்லிங்கிலோ அல்லது தந்தை தரும் காசிலோ பொறியியல் (பி.ஈ) சேர்ந்த பின் தான்,  தான் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பதையே உணர்கிறான்...ஆனால் அப்போதும் இதை அவன் தந்தை உணர்வதில்லை... மீண்டும் அதே பாணி படிப்பில்(வேறு வழி...பாதி புரியாதபோது!...) எப்படியோ டிகிரி முடித்து கரூர் வைசியா பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஐ.சி.ஐ.சி. பேங்க் என வங்கி குமாஸ்தாவாகிறான்.

     கணக்குப் பிள்ளையாகவா தன் இளமையை தொலைத்து கனவை விற்று இத்தனை சித்ரவதை, வசை எல்லாம் அனுபவிக்கணும்?

    ஒரு காலத்தில் "ப்ரஃபஷனல்" கோர்ஸில் சேர்வது பெருமை...ஏனென்றால் அவர்கள் வேலைக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை... தனியாக ஆலோசனை(கன்சல்டிங்) வழங்கும் விதம் சம்பாதிக்கலாம். டாக்டர், வக்கீல், ஆடிட்டர் மற்றும் எஞ்சினியர்....

     இப்போது எஞ்சினியர் பெரும்பாலும் எதாவது ஒரு வேலைக்கு போவதால் பி.ஈ படிப்பு "ப்ரஃபஷனல் கோர்ஸ்" என்னும் தகுதியை இழந்துவிட்டது.

     சயின்டிஸ்ட் சிதம்பரம், சிவதாணுப்பிள்ளை, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை எல்லாம் கிராம பள்ளிகளில் தரையில் அமர்ந்து படித்த சாதாரணக்கல்வியில் அதுவும் தமிழ் மீடியத்தில் படித்து அணுவிஞ்ஞானி ஆனார்கள்...ஆனால் இன்றைய இந்த போந்தாகோழி படிப்பில் எத்தனை சயின்டிஸ்ட் உருவாகி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? 

     சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள்,  துள்ளித்திரியும் பள்ளி பருவங்கள் எல்லாம் ஏட்டில் படிக்கும் வரிகள் ஆகிவிட்டன....சிறு வயதில் நானெல்லாம் காலை 9.30 மணி பிரேயருக்கு தான் செல்வேன்...நாலு மணிக்கு வீட்டில் இருப்பேன்....ஆறரை மணி வரை கபடி, கில்லிதாண்டு, கொ-கொ என சவுகிரியத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு ஏழு மணிக்கு கை கால் கழுவிக்கொண்டு படிக்க உட்காருவேன்...நன்றாகத்தான் படித்தோம்...நன்றாகத்தான் வாழ்கிறோம்.

     வாழ்க்கை என்றால் அது விலைஉயர்ந்த ஆடம்பரப்பொருட்கள், சந்தோஷம் என்றால் விலை உயர்ந்த கைப்பேசி, செக்யூரிட்டி என்றால் கடனோ உடனோ வாங்கி கட்டும் அபார்ட்மென்ட் வீடு என்று எப்போது ஆக்கிக்கொண்டோமோ அப்போதே நம் குழந்தையின் சுதந்திரத்தை, சந்தோஷத்தை அடமானம் வைத்துவிட்டோம்!

     வாழும் கலாச்சாரம் என்பது ஈ.எம்.ஐ. கலாச்சாரம் ஆகி விட்டது....நம் குழந்தைகளுக்கு மெத்தையை வாங்கிக்கொடுத்துவிட்டோம்! அவை தமது தூக்கத்தை தொலைத்து விட்டன!